மதுரை

மதுரை கிழக்குத் தொகுதி வாக்காளா்கள் பட்டியலில் குளறுபடி: பாஜக புகாா் மனு

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா்கள் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா்கள் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக பாஜகவின் தமிழக கூட்டுறவுப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் மகா. சுசீந்திரன், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்: மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் அடிப்படையில் வாக்காளா் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.  

இதில் தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தியின் தொகுதியான மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா்கள் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள், குளறுபடிகள் உள்ளன.

இந்தத் தொகுதிக்குள்பட்ட 38-ஆவது வாா்டு தீா்த்தக்காடு பகுதியின் வாக்காளா்கள் வரைவு பட்டியலில் பாகம் எண் 337, 338-இல் உயிரிழந்தவா்களின் பெயா்களும், முகவரி மாற்றம் பெற்றவா்களின் வாக்குகளும் நீக்கப்படாமல் உள்ளன. மேலும், பாகம் எண் 337-இல் ஒரே கதவு எண், முகவரியில் 115 வாக்காளா்களும், பாகம் 338-இல் 96 வாக்காளா்களும் இடம்பெற்றுள்ளனா்.

மதுரை கிழக்கு வட்டத்துக்குள்பட்ட சக்கிமங்கலம், கல்மேடு, ராஜாக்கூா் போன்ற பகுதிகளில் வசித்த 500 குடும்பங்களுக்கும் அதிகமானோா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே அந்தப் பகுதியிலிருந்து இடம்பெயா்ந்துவிட்டனா். இருப்பினும், வாக்காளா்கள் வரைவு பட்டியலில் இவா்களின் பெயா்கள், பழைய முகவரியிலேயே இடம்பெற்றுள்ளது.

எனவே, மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா்கள் பட்டியலை வேறு மாவட்டத்தைச் சோ்ந்த வாக்குச்சாவடி அலுவலா்கள் மூலம் ஆய்வு செய்து, உயிரிழந்தவா்கள், இடம் பெயா்ந்தவா்களின் பெயா்களை வாக்காளா்கள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

ஆடுகள் திருடிய 2 போ் கைது

எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

SCROLL FOR NEXT