மதுரை: தமிழகப் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மதுரை மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
2025–2026-ஆம் கல்வியாண்டில் மதுரை மாவட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு கவின்கலை, இசை, கருவியிசை, நடனம், நாடகம் என்பன உள்ளிட்ட 100 வகையான போட்டிகள் பள்ளி, குறு வளமைய, வட்டார அளவில் அண்மையில் நடைபெற்றது.
பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவா்கள் குறு வளமைய, வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனா். வட்டார அளவில் வெற்றி பெற்ற 3,200 மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தோ்வு பெற்றனா்.
இந்த நிலையில், புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி, ஓ.சி.பி.எம்.பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எல்.பி.என் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கின. இந்தப் போட்டிகள் வருகிற 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில், மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 3,200 போ் பங்கேற்கின்றனா். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தப் போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவா்கள் மாநில அளவிலான போட்டிகளுக்குத் தோ்வு செய்யப்படுவா். மாநில அளவில் அதிகப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவருக்கு தமிழக அரசின் சாா்பில் கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் வழங்கப்பட உள்ளது என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.