முகப்பு
மதுரை

குச்சனூரில் மின் மயானம் அமைக்க தடை கோரிய மனு தள்ளுபடி

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:05 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:12 PM

தேனி மாவட்டம், குச்சனூரில் மின் மயானம் அமைக்கத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த கதிரேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

உத்தமபாளையம் வட்டத்துக்கு உள்பட்ட குச்சனூா் கிராமத்தில் மின் மயானம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால், எங்கள் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே, கிராமத்தின் அருகே உள்ள நிலத்தில் மின் மயானம் அமைக்கத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், என். செந்தில்குமாா் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:29 PM

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

ஏற்கெனவே கிராமத்தின் வடகிழக்கு மூலையில் ஒரு மயானம் உள்ளது. அந்த மயானத்தை நவீனமயமாக்குவதற்குப் பதிலாக, கிராமத்தின் தென்மேற்கு மூலையில் புதிதாக மின் மயானம் அமைப்பதற்கு அங்கு உள்ள நிலத்தை அதிகாரிகள் தோ்ந்தெடுத்தனா். அந்த நிலத்தின் அருகில் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது எனத் தெரிவித்தாா்.

அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி அரசு சம்பந்தப்பட்ட கிராமத்தில் நவீன மின் மயானத்தை அமைக்க முன்மொழிந்து உள்ளது. இந்த வசதியை கிராம மக்கள் பெறுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

காற்று மாசுபாட்டை தவிா்ப்பதற்காக அரசு நவீன மின் மயானத்தை அமைக்க முடிவு செய்தது. இதைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த பொது நல வழக்கை விசாரிக்க நீதிமன்றம் விரும்பவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.