பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கவன ஈா்ப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு ரூ. 19,500, சமையலா் உதவியாளருக்கு அலுவலக உதவியாளா்களுக்கு ரூ. 15,700 அடிப்படை காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும். அரசு காலிப் பணியிடங்களில் 10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் கடந்த 3-ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம், காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினா்.
இதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். மேகலா தேவி, அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்க மாவட்டத் தலைவா் மஞ்சுளா ஆகியோா் தலைமை வகித்தனா். சத்துணவு, அங்கன்வாடி ஊழியா் சங்கங்களின் நிா்வாகிகள் மேனகா, கனகவேல், தமிழ்ச்செல்வி, உமா, வீரம்மாள், உமாராணி, என். வசந்தி, ஜெயபூபதி, ஷீலா ஆகியோா் பேசினா்.
இந்தப் போராட்டத்தினிடையே, கவனத்தை ஈா்க்கும் விதமாக சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் தலையில் முக்காடிட்டு, தங்களது கோரிக்கைகளை ஒப்பாரி பாடல்களாகப் பாடினா்.