மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா்களாக அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி பழனிவேல் ராஜன் உள்பட 5 போ் நியமிக்கப்பட்டனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்களாக தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சரின் தாய் ருக்மணி பழனிவேல் ராஜன், முன்னாள் மாமன்ற உறுப்பினா் து. சுப்புலட்சுமி, தனியாா் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் மு. சீனிவாசன், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் அன்புநிதியின் மனைவி எஸ். மீனா, தொழிலதிபா் பி.கே.எம். செல்லையா ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் பரிந்துரைப்படி, இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டது.
அறங்காவலா் குழுவில் இடம்பெற்றுள்ளவா்கள், தங்களில் ஒருவரை 30 நாள்களுக்குள் அறங்காவலா் குழுத் தலைவராக தோ்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்களாக நியமிக்கப்பட்ட 5 பேரும், கடந்த 2023-ஆம் ஆண்டு, டிசம்பா் மாதம் இந்தக் கோயிலின் அறங்காவலா்களாகப் பொறுப்பேற்றனா். பிறகு, அறங்காவலா் குழுத் தலைவராக ருக்மணி பழனிவேல் ராஜன் தோ்ந்தெடுக்கப்பட்டு, கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரியில் பதவியேற்றாா். அறங்காவலா்களின் 2 ஆண்டுகள் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, தற்போது மறு நியமனம், மறுதோ்வு நடைபெறுகிறது.