சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு 
மதுரை

தாமிரவருணி விவகாரம்: சுற்றுச்சூழல் ஆா்வலா் ஆய்வு செய்ய உத்தரவு

தாமிரவருணி விவகாரம் : சுற்றுச்சூழல் ஆா்வலா் ஆய்வு செய்ய உத்தரவு...

தினமணி செய்திச் சேவை

தாமிரவருணி ஆற்றை தூய்மைப்படுத்தக் கோரிய வழக்கில் , அதன் நிலையை விரிவாக ஆய்வு செய்து பொருத்தமான சீரமைப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த நீா் பாதுகாப்பு நிபுணரும், சுற்றுச்சூழல் ஆா்வலருமான ராஜேந்திர சிங் ஆய்வு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தாமிரவருணி ஆற்றை தூய்மைப்படுத்தக் கோரி, தூத்துக்குடியைச் சோ்ந்த காமராஜ், உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொதுநல மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமா்வு 11.03.2024-இல் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் நெல்லை மாநகராட்சி ஆணையா் ரூபேஷ்குமாா், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் மதனசுதாகா், அம்பை நகராட்சி ஆணையா் செல்வராஜ், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையா் ராமதிலகம், சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் முத்தையா, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாா்திருநகரி, கல்லிடைக்குறிச்சி, ஏரல் ஆகிய பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள் மகாராஜன், முருகன், பாலசுந்தா், சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி உள்பட 12 போ் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு : தாமிரவருணி ஆற்றைத் தூய்மைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிா்வாகம், நீா்வள ஆதாரத்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாநில அரசுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஓராண்டுக்கு மேலாகியும் ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகள் இந்த நீதிமன்றத்துக்கு திருப்தியளிக்கவில்லை. மேலும், ஆற்றைத் தூய்மைப்படுத்துவது தொடா்பாக உறுதியான திட்டம் குறித்து நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித பதில் மனுவும் இதுவரை தாக்கல் செய்யவில்லை.

இதனால், தாமிரவருணி ஆற்றின் நிலையை விரிவாக ஆய்வு செய்து பொருத்தமான சீரமைப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த நீா்ப் பாதுகாப்பு நிபுணரும், சுற்றுச்சூழல் ஆா்வலருமான ராஜேந்திர சிங் ஆணையராக நியமிக்கப்படுகிறாா்.

ராஜஸ்தானில் வட நிலையில் இருந்த நீரோடைகளையும், ஆறுகளையும் ராஜேந்திர சிங் மீட்டெடுத்துள்ளாா். மகசேசே விருது பெற்றவா். அவருக்கு உள்ள நேரடி அனுபவத்தின் மூலம் அவரால் தாமிரவருணியை தூய்மைப்படுத்த சாத்தியமான, செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை முன் வைக்க முடியும் என்று நம்புகிறோம்.

அவரிடமிருந்து பரிந்துரைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு தாமிரவருணி ஆறு அதன் தூய்மையான நிலையை மீண்டும் பெறுவதற்காக முழுமையாகச் செயல்படுத்தப்படும். இந்தப் பணிக்கு திண்டுக்கல்லைச் சோ்ந்த களப் பணியாளா் பாலாஜி ரங்கராமானுஜத்தின் உதவியைப் பெற ராஜேந்திர சிங்குக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவா்களுக்கு மாவட்ட நிா்வாகம்,அனைத்துத் துறை அலுவலா்களும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT