மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் இருவர் முதலிடம் பிடித்ததால், குலுக்கல் முறையில் முதல் பரிசு வழங்கப்பட்டது.
மதுரை பாலமேட்டில் இன்று (ஜன. 16) நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண அதிகாலை முதலே பெருந்திரளான மக்கள் திரண்டனர். போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 870 காளைகளும், சுமார் 460 வீரர்கள் களம் கண்டனர். இந்தப் போட்டியில் பொந்துகம்பட்டியை சேர்ந்த அஜித் என்பவரும், பொதும்புவை சேர்ந்த பிரபாகரன் என்பவரும் 16 காளைகளை அடக்கி இருவரும் முதலிடம் பிடித்தனர். இதனால், குலுக்கல் முறையில் முதல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, குலுக்கல் முறையில் அஜித் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
இருப்பினும், குலுக்கல் முறையில் அஜித் தேர்வு செய்யப்பட்டதற்கு இரண்டாவது பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்படும் பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மூன்றாவது இடத்தை நாமக்கல்லை சேர்ந்த கார்த்திக் வென்றார்.
மேலும், சிறந்த காளையாக குலமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீதரின் காளை வெற்றிபெற்று டிராக்டர் பரிசு வென்றது. இரண்டாவது பரிசாக கைக்குறிச்சியின் தமிழ்செல்வனின் காளை வென்றது. இவருக்குப் பரிசாக கன்றுடன் நாட்டுப் பசுமாடு வழங்கப்பட்டது.
பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டுப் போட்டியும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இருப்பினும், மதுரையின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான் உலகளவில் பிரசித்தி பெற்றவை.
அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை (ஜன. 17) நடைபெறவுள்ளது.
அலங்காநல்லூரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவல் திடலில் நடைபெறும் இந்தப் போட்டியை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கி வைக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.