பழனியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள்
பழனியில் மீண்டும் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பழனியில் மீண்டும் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பழனியில் பங்குனி உத்திரம் முதல் வருவாய்த்துறை, திருக்கோயில் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அடிக்கடி சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஆக்கிரமிப்புக்கு முக்கியக் காரணம் நடைபாதை, தாற்காலிக மற்றும் தட்டுக்கூடை கடைகளே.
Advertisement
Advertisement
பஸ் நிலையம் முதல் பாளையம், சன்னிதி வீதி, கிரி வீதி பகுதிகளில் கூடைகளை நடுரோட்டில் வைத்து வியாபாரம் செய்வோர், சூடம் விற்பவர்கள், தள்ளுவண்டியில் பேன்சி, பழம் விற்பவர்கள், தட்டுக்கூடைகளின் கீழ் சக்கரங்கள் வைத்து வியாபாரம் செய்வோரே அதிகம். இவை தவிர ஆட்டோ, குதிரை வண்டிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. விழாக் காலங்களில் சுவாமி புறப்பாடு, அலகு குத்தி வரும் பக்தர்கள் எனக் கூட்டமாக வரும்போது, ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள யாரும் முன்வருவதில்லை என்பது வேதனையான விஷயம்.
இதனால் பக்தர்களுக்கும், கடைக்காரர்களுக்கு அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளும்போது மட்டும், இந்தக் கடைகள் அகற்றப்படுகின்றன. மீண்டும் மாலையிலேயே ஆக்கிரமிப்புகள் முளைத்து விடுகின்றன.
இதுகுறித்து நகராட்சி, திருக்கோயில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, எங்கள் எல்லையில் இருந்த ஆக்கிரமிப்புகளை மட்டுமே அகற்றுகிறோம். மேற்படி ஆக்கிரமிப்புகளை போலீஸார்தான் அகற்ற வேண்டும் என்கின்றனர்.
ஆனால், அடிவாரம் போலீஸார் இந்த ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்வதில்லை என்று புகார் எழுந்துள்ளது. பழனியில் பல்வேறு விடுதிகளில் தவறான செயல்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. கோடை விடுமுறையாதலால் பழனிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
ஆகவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், பழனி போலீஸாரின் நடவடிக்கையைக் கண்காணித்து தடுத்து, தினந்தோறும் ஆக்கிரமிப்பு மற்றும் பலவித தொல்லைகளால் அவதிப்படும் பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.