திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சியில் நிதி நெருக்கடி ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை!

DIN

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம், 15ஆம் தேதி வரை ஊதியம் வழங்காததால் பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் நகராட்சி, கடந்த 2014ல் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நிலையில் 200 பேர், துப்புரவுத் தொழிலாளர்கள் 240 பேர் என மொத்தம் 440 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு மாதந்தோறும் சுமார் ரூ.1.10 கோடி செலவிடப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான ஊதியம் செப்.15ஆம் தேதி வரை வழங்கப்படாமல் உள்ளது.
மாதத்தின் முதல் நாள் கிடைக்க வேண்டிய ஊதியம், 15 நாள்களாக வழங்கப்படாமல் இருப்பது பணியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியாக அலுவலகப் பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீட்டு வாடகை, பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாமலும், மாதாந்திர செலவுகளுக்கு கூட கடனாளியாக மாறும் அவலை நிலை ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி பணியாளர்கள் சிலர் கூறியது:
மாநகராட்சி நிர்வாகமாக மாறியது முதலே, நிதி நிலை மோசமடைந்து விட்டது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல், தனி அலுவலர் நிர்வாகம் நடைபெறுவதால், மத்திய அரசு மூலம் வழங்கப்படும் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நிதி நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.
தனி அலுவலர் நிர்வாகத்தில், மாநகராட்சியின் வருவாய் நிதி மூலமே பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கான கட்டணம் மட்டுமின்றி, அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டதாலும், கூடுதல் நிதி சுமை ஏற்பட்டுள்ளது. அதேபோல், வீடுகள், கட்டடம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், அதனை முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது.
இதனால், வரி வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் குடிநீர் கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதனை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக வருவாய் மற்றும் பொறியியல் பிரிவினரிடையே அரசாணை தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இதனிடையே, உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலம் முடியும்போது, வீட்டு வரி, குடிநீர் கட்டணம், ஏலம் மூலம் மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய சுமார் ரூ.5 கோடிக்கான வசூலுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதேபோல், மாநில நிதிக் குழு ஆணையத்தின் மூலம், மாநகராட்சிக்கு மாதந்தோறும் ரூ.1 கோடி நிதி வழங்கப்படுகிறது. அதில், ரூ.50 லட்சம் பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப் பணிகளுக்கான உலக வங்கி கடனுக்கு நிதிக் குழு ஆணையமே பிடித்தம் செய்துவிடுகிறது. மீதமுள்ள ரூ.50 லட்சம், வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு சில நாள்களுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளினால், மாநகராட்சி நிர்வாகம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT