திண்டுக்கல்

கொள்ளை  மகசூல் தரும் கோ-6: மக்காச்சோள விதைகள் கிடைப்பதில் சிக்கல்!

கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் 6 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட

DIN

கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் 6 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட  கோ-6 வீரிய ஒட்டுரக மக்காச்சோள விதைகள்  விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளபோதிலும் அவை கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
தமிழகத்தில் திண்டுக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 
கரீப், ராபி மற்றும் கோடை பருவங்களில் மக்காச்சோளம் மானாவாரி பயிராகவும், இறவைப் பயிராகவும்  சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் அதிக மகசூலுடன், கூடுதல் லாபம் ஈட்டும் நோக்கில் பாரம்பரிய மக்காச்சோள ரகங்களுக்கு மாற்றாக வீரிய ஒட்டுரக விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 
அதன்படி, கோவை வேளாண் பல்கலை. சார்பில் கோ- 6 வீரிய ஒட்டுரக விதைகள் 6 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டன. கோ- 6 வீரிய ஒட்டுரகம் மூலம், ஹெக்டேருக்கு 9 முதல் 10 டன் மகசூல் கிடைத்து வருவதாக வேளாண்மை பல்கலை. பேராசிரியர்கள் கூறுகின்றனர். ஆனாலும், தனியார் விதை நிறுவனங்கள் சார்பில் விற்பனை செய்யப்படும் வீரிய ஒட்டுரக  வித்துக்களை கடந்து, கோ-6 வீரிய ஒட்டுரகம் விவசாயிகளை சென்றடைய முடிவதில்லை.
தனியார் வீரிய ஒட்டுரக விதை விற்பனையாளர்களிடம் கூடுதல் விலை கொடுத்தும், அவர்கள் பரிந்துரை  செய்யும் பூச்சிக் கொல்லி மற்றும் களைக் கொல்லிகளை பயன்படுத்தியும் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அதே நேரத்தில் இதுகுறித்து  விவசாயிகளுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தவும், உரிய நேரத்தில் ஒட்டுரக விதைகளை வழங்குவதற்கும்,  வேளாண் பல்கலை. மற்றும் வேளாண்மைத்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக  பஞ்சம்பட்டியைச் சேர்ந்த விவசாயி பாத்திமா ராஜரத்தினம் கூறியது:
 கோ-6 வீரிய ஒட்டுரக மக்காச்சோள விதைகள் கிலோ ரூ.150க்கு விற்பனை  செய்யப்பட்டு வந்த  நிலையில்,  தற்போது ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  நோய் மற்றும் பூச்சி  எதிர்ப்பு  திறன் கொண்டதாக மட்டுமின்றி ஹெக்டேருக்கு 10 டன்  வரை மகசூல் அளிக்க கூடியதாகவும் உள்ளது. அதே நேரத்தில் 30க்கும் மேற்பட்ட தனியார் விதை நிறுவனங்கள் சார்பில் 90 வகையான வீரிய ஒட்டு ரக மக்காச்சோள வித்துக்கள் விற்பனைக்கு  கிடைக்கின்றன. 
தனியார் நிறுவனங்கள் சார்பில் கிராமங்களுக்கு நேரடியாக சென்று பல்வேறு  வாக்குறுதிகளை கூறி  ஒட்டு ரக விதைகளை  விற்பனை செய்து விடுகின்றன. மேலும் விற்பனையாளர்களுக்கு கூடுதல் ஊக்கத் தொகை வழங்கப்படுவதால் தனியார் வித்துக்களை மட்டுமே அவர்கள் பரிந்துரை செய்கின்றனர். அதற்கு தேவையான பூச்சிக்  கொல்லி  மற்றும் களைக் கொல்லிமருந்துகளையும் விற்பனை செய்து, விவசாயிகளுக்கு  கூடுதல் செலவை  ஏற்படுத்தி விடுகின்றனர். ரூ.70 செலவில் பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்தினால் போதும் என்று கூறி, ரூ.1700 பெறுமான மருந்துகளை விற்பனை செய்கின்றனர் என்றார்.
இதுதொடர்பாக வேளாண்மை அலுவலர் ஒருவர் கூறியது: அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கோ-6 வீரிய ஒட்டுரக மக்காச்சோள விதைகள், மகசூலில் கடந்த 6 ஆண்டுகளாக முன்னிலையில் இருந்து வருகிறது. ஆனாலும், விதைகளின் தேவையை அறிந்து, முன்னதாகவே வேளாண் பல்கலை.க்கு தகவல் தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. அதுபோல பெறப்படும் வீரிய ஒட்டுரக விதைகள், சில நேரங்களில் விற்பனையாகாமல் போனால் அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர் பொறுப்பேற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் விவசாயிகளுக்கு தேவையான நேரங்களில் உடனடியாக பல்கலை.யிலிருந்து  விதைகளை பெற முடியாத சூழலும் உள்ளது.
கோ-6 வீரிய ஒட்டுரக மக்காச்சோள விதைகள் விவசாயிகளுக்கு எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களிலுள்ள விதை உற்பத்தியாளர்கள் கோ-6 வீரிய ஒட்டு ரக விதைகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய அறிவுறுத்த வேண்டும். விதை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT