வத்தலகுண்டு அருகே காவல் சார்பு ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய அண்ணன், தம்பி இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
வத்தலகுண்டு காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மாயன். இவர், பழைய வத்தலகுண்டு பிரிவு அருகே வெள்ளிக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பழைய வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் அப்துல்லா (25), மன்சூர் அலிகான் (28) ஆகியோர் தங்களது நண்பர் ஒருவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
இதனைப் பார்த்த காவல் சார்பு ஆய்வாளர் மாயன், மோட்டார் சைக்கிளை வழிமறித்து தலைக்கவசம், மூவர் பயணித்தது போன்ற விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்க முயற்சித்தாராம். அப்போது, உள்ளூருக்குள் செல்லும் தங்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். வாக்குவாதம், கைகலப்பாக மாறிய நிலையில், சார்பு ஆய்வாளர் மாயன் கடுமையாக தாக்கப்பட்டாராம். இதனை அடுத்து, வத்தலகுண்டு காவல் நிலையத்தில் மாயன் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்துல்லா மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.