கன்னிவாடி வனப்பகுதியில் 10 ஆயிரம் விதைப் பந்துகள் வீச்சு
கன்னிவாடி வனப் பகுதியில் 10 ஆயிரம் விதைப் பந்துகள் தூவப்பட்டன.
கன்னிவாடி வனப் பகுதியில் 10 ஆயிரம் விதைப் பந்துகள் தூவப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகம் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேரில் அமைந்துள்ளது. கன்னிவாடி, சித்தையன்கோட்டை, பெரியூர், செங்கட்டாம்பட்டி, அரசமரத்துப்பட்டி, கோட்டைவெளி என 6 பகுதிகளாக இந்த வனப் பகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் கன்னிவாடி காப்புக்காடு பகுதியில் 10 ஆயிரம் விதைப் பந்துகள் தூவும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆல், அரசு, அத்தி, குடை வேல், கல்இச்சி உள்ளிட்ட விதைகளுடன் கூடிய விதைப் பந்துகளை தூவும் பணி வனச்சரகர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. சில இடங்களில் விதைப் பந்துகளை எறிந்தும், ஒருசில இடங்களில் குழி தோண்டி புதைக்கும் பணிகளும் நடைபெற்றன. இதுதொடர்பாக வனச்சரகர் சக்திவேல் கூறுகையில், கன்னிவாடி காப்புக்காடு பகுதிகலான நாயோடை, மொட்டைக் கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் வனத்தின் அடர்த்தி குறைவாக உள்ளது.
அதுபோன்ற பகுதிகளை தேர்வு செய்து விதைப் பந்துகள் தூவப்படுகின்றன. தற்போது மழை பெய்து வருவதால், தூவப்படும் விதைகளின் முளைப்புத் திறன் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். விதைப் பந்து தூவும் பணியில், கன்னிவாடி சரகத்தைச் சேர்ந்த வனவர்கள், வனக் காப்பாளர்கள், வனக் காவலர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.