4 ஆவது நாளாக..! மே.வங்கத்தின் அரசு அலுவலகங்களுக்கு சயனைடு வெடிகுண்டு மிரட்டல்!
மேற்கு வங்கத்தின் பல்வேறு அரசு அலுவலகங்கள், தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்...
மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்கள், கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தின் ஹூக்லி, பாஸ்கிம் பர்தமான், பாங்குரா மற்றும் ஹவுரா ஆகிய மாவட்டங்களின் முக்கிய தபால் நிலையங்கள் மற்றும் அதனோடு அமைந்துள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கும் வெள்ளிக்கிழமை (பிப். 27) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாள்களாக மேற்கு வங்கம் மாநிலத்தின் நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்தன.
Advertisement
Advertisement
ஆனால், அவை அனைத்தும் நிர்வாகத்தின் தயார்நிலைக்கு வைக்கப்பட்ட சோதனை எனவும், உண்மையான தாக்குதல் வெள்ளிக்கிழமைதான் நடைபெறவுள்ளது எனவும் மின்னஞ்சல் மூலம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மர்ம நபர்கள் அனுப்பிய மின்னஞ்சலில், சயனைடு வாயு நிரப்பிய ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு மதியம் 12.10 மணிக்கு வெடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, மிரட்டல் விடுக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களின் தலைமைத் தபால் அலுவலகங்களிலிருந்த அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர், அங்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் அலுவலகங்களின் வளாகங்கள் முழுவதும் சோதனைகள் மேற்கொண்டனர். இந்தச் சோதனைகளின் முடிவில், சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காததினால் இந்த மிரட்டல்களும் போலியானவை என உறுதி செய்யப்பட்டன.
இருப்பினும், ஒரே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களின் அரசு அலுவலகங்களுக்கு இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால், அரசுப்பணிகள் பாதிக்கப்பட்டதுடன் அங்கு பதற்றமான சூழல் நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bomb threats have been made via email to post offices and passport offices in various districts of West Bengal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.