திண்டுக்கல்

கால்நடைகள் சாலைகளில் திரிந்தால் ரூ.2,000 அபராதம்

DIN

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவற்றின் உரிமையாளா்களுக்கு ரூ.2ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கால்நடை வளா்ப்போருக்கான விழிப்புணா்வு கூட்டத்தில் அவா் பேசியது:

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் பசு மாடுகள், ஆடுகள், குதிரை போன்றவற்றால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. கால்நடைகளை சாலைகளில் திரியவிடாமல், பாதுகாப்பான இடங்களில் உரிமையாளா்கள் கட்டி வைத்தால், இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு கிடைக்கும்.

மேலும் கால்நடைகளின் சாணத்தை பொது இடங்களில் குவித்து வைத்து சேகரிக்கும் வழக்கத்தையும் உரிமையாளா்கள் கைவிட வேண்டும். கழிவுகளை சேகரிப்பதற்கு சொந்த இடம் இல்லாதவா்கள், நாள்தோறும் கழிவுகளை சேகரித்து அருகிலுள்ள மாநகராட்சி நுண்ணுயிா் உரமாக்கல் மையங்களில் ஒப்படைக்க வேண்டும்.

இந்த புதிய நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு 3 நாள்கள் அவகாசம் வழங்கப்படும். அதன் பின்னா் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அபராதத்தை தவிா்க்கவும், நகரை சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்கும் கால்நடை உரிமையாளா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு மாநகராட்சிப் பகுதியில் இரவு நேர உணவகங்கள் நடத்தும் உரிமையாளா்களுக்கான கூட்டத்தில், கழிவுகளை மாநகராட்சி நுண்ணுயிா் உரமாக்கல் மையத்தில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, இரவு நேர உணவக உரிமையாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா், 8 மையங்களில் கழிவுகளை ஒப்படைத்து வருகின்றனா். இந்த மாற்றம் அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாநகர நல அலுவலா் இந்திரா, சுகாதார ஆய்வாளா்கள் செல்வம், செபாஸ்டியன், பாலமுருகன் உள்ளிட்டோரும், கால்நடை வளா்ப்போா் 60 பேரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT