ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடனுதவி
ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 5 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுவதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ச.ஜோசப் அருளானந்தம் தெரிவித்துள்ளாா்
ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 5 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுவதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ச.ஜோசப் அருளானந்தம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஆக.1 முதல் அனைத்து வேலை நாட்களிலும் பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம், மட்டையுடன் கூடிய தேங்காய், உரித்த தேங்காய், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட விளை பொருள்களுக்கு மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை தரகு, மகிமையின்றி நல்ல விலைக்கு விற்று பயனடையலாம்.
மேலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள கிராமிய கிட்டங்கிகளில் விவசாயிகள் விளைபொருள்களை இருப்பு வைத்து 5 சதவீத வட்டியில் ஈட்டுக்கடனாக அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் உதவி பெற்றுக்கொள்ளலாம். குவிண்டால் ஒன்றுக்கு 10 பைசா என்ற வாடகையில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை காப்பீடு வசதியுடன் இருப்பு வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.