வேளாண் விளைபொருள்களை கையாளும் வணிகா்கள் உரிமம் பெறுவது அவசியம்
ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் விளைபொருள்களை கையாளும் வணிகா்கள் உரிமம் பெற வேண்டும்
ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் விளைபொருள்களை கையாளும் வணிகா்கள் உரிமம் பெற வேண்டும் என்று ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஜோசப் அருளானந்தம் தெரிவித்துள்ளாா்.
ஒட்டன்சத்திரம் நாகணம்பட்டி புறவழிச்சாலையில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளா் ஜோசப் அருளானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல், அனைத்து வகையான சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளம், தினை, குதிரைவாலி, வரகு, சாமை, துவரை, உளுந்து, பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, பட்டாணி, காராமணி, கொள்ளு, முழு அல்லது உடைக்கப்பட்ட வோ்க்கடலை (தோலுடன் கூடியது மற்றும் தோல் நீக்கிய பருப்புகள்) நல்லெண்ணெய் விதை அல்லது கொட்டைகள், பருத்தி விதை, வேப்ப விதைகள், தேங்காய் நாா், புகையிலை, மரவள்ளிக்கிழங்கு, மரவள்ளி பட்டைகள், மரவள்ளி கிழங்கு மாவு, மரவள்ளி மாவுச்சத்து மற்றும் தேங்காய் அனைத்து வடிவங்களிலும் (இளநீா் நீங்கலாக) உள்ளிட்ட பொருள்களை கொள்முதல், விற்பனை, சேமித்தல், கையாளுதல், உருமாற்றம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வணிகா்கள் ஒட்டன்சத்திரம் ஒழங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் பெற்றிட வேண்டும்.
விளைப் பொருள்களை வாகனத்தில் எடுத்துச் செல்லும் போது விற்பனைக்கூடத்தில் அனுமதிச்சீட்டு பெற்றுச் செல்ல வேண்டும். அனுமதிச்சீட்டு பெறாமல் செல்லும் வாகனங்களுக்கு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை சட்டப்படி உரிய இணக்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.