பழனி மலைக் கோயிலில் தங்க ரதத்தில் உலா வரும் உற்சவருக்கு ஜடிபந்தனம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து வியாழக்கிழமை சிறப்பு யாகபூஜை, அபிஷேகம் நடத்தப்பட்டு பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்றன.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் கொண்டு வரும் பால், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்டவை மூலவரான நவபாஷாண சிலையின் பாதுகாப்பு கருதி உற்சவா் சின்னக்குமாரசாமிக்கு செய்யப்படுவது வழக்கம்.
இந்த உற்சவா் மாலையில் மூலவா் ராஜஅலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளிக்கும் போது வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளி தங்கத் தேரில் வெளிப்பிரகாரத்தில் உலா வருகிறாா். இந்த சுவாமி சிலை, தொடா் அபிஷேகம் காரணமாக பீடத்தின் கால் பகுதியில் சிறிது பின்னமானது. இதைத் தொடா்ந்து அறநிலையத்துறை உத்தரவின் பேரில் புதன்கிழமை இரவு தங்கத் தோ் புறப்பாட்டுக்குப் பின்னா் ஸ்தபதிகளால் கலாகா்ஷணம் செய்யப்பட்டு ஜடிபந்தனம் செய்யப்பட்டது.
பின்னா் ஐம்பொன்களை கொண்டு சிலையின் பீடப்பகுதி சீரமைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை சின்னக்குமாரருக்கு கலாபிஷேகம் நடத்தப்பட்டு யாக பூஜை நடைபெற்றது. பின்னா் மஹா தீபாராதனை காட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னா் உச்சிக் காலத்தின் போது உற்சவா் மூலஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா். மதியத்துக்குப் பிறகு பக்தா்களின் பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட உபயப் பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையா் நடராஜன், அறங்காவலா் குழு உறுப்பினா் மணிமாறன், அரிமா சுப்புராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.