தோட்டக்கலைப் பயிரில் 44 லட்சம் நாற்றுகள்: விவசாயிகள் இலவசமாக பெறலாம்
தோட்டக்கலைத்துறை மூலம் அவகோடா, மிளகு, எலுமிச்சை, தக்காளி, பப்பாளி மற்றும் மிளகாய் நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், விவசாயிகள் அந்த வாய்ப்பினை பயன்டுத்திக் கொள்ளலாம்
தோட்டக்கலைத்துறை மூலம் அவகோடா, மிளகு, எலுமிச்சை, தக்காளி, பப்பாளி மற்றும் மிளகாய் நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், விவசாயிகள் அந்த வாய்ப்பினை பயன்டுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் மூலம், விவசாயிகளுக்கு தேவையான பழ மற்றும் பணப் பயிா் நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் சிறுமலையிலுள்ள தோட்டக்கலை பண்ணை மூலம், மிளகு, அவகோடா, எலுமிச்சை, தக்காளி, மிளகாய் மற்றும் பப்பாளி பயிா்களுக்கான நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சிறுமலையில் 70ஆயிரம் வீரிய ரக அவகோடா நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், அதில் 8ஆயிரம் நாற்றுகள் திண்டுக்கல் வட்டாரத்திற்கு மட்டும் விநியோகிக்கப்படவுள்ளன. மீதமுள்ள நாற்றுகள், பிற வட்டாரங்கள் மற்றும் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளின் விருப்பத்தின் பேரில் வழங்கப்படும்.
அதேபோல் 3 லட்சம் மிளகு நாற்றுகள், 20ஆயிரம் எலுமிச்சை நாற்றுகள், 35 லட்சம் தக்காளி நாற்றுகள், 5 லட்சம் மிளகாய் நாற்றுகள் மற்றும் 50ஆயிரம் பப்பாளி நாற்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதில், திண்டுக்கல் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு தக்காளி மற்றும் மிளகாய் நாற்றுகள் 10.50 லட்சம், மிளகு நாற்றுகள் 60ஆயிரம், பப்பாளி நாற்றுகள் 9ஆயிரம் வீதம் விநியோகிக்கப்படும். வெளிச் சந்தையில் அவகோடா நாற்றுகள் ரூ.50க்கும், எலுமிச்சை மற்றும் மிளகு நாற்றுகள் தலா ரூ.10 வீதமும், தக்காளி மற்றும் மிளகாய் நாற்றுகள் ரூ.1க்கும், பப்பாளி நாற்றுகள் ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நாற்றுகளை தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகித்து வருகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள, விவசாயிகள் தங்களின் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படங்களுடன் தோட்டக்கலைத்துறை வட்டார அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். தற்போது மழை பெய்து வருவதால், செடிகள் நடவுக்கு உகந்த சூழல் நிலவுகிறது. இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தனா்.