முகப்பு
திண்டுக்கல்

உண்டியலில் தவறுதலாக காணிக்கை: பெண்ணுக்கு நகை வழங்கினாா் அறங்காவலா் குழு தலைவா்

பழனி மலைக்கோயில் உண்டியலில் தவறுதலாக தாலிசங்கிலியை காணிக்கையாகச் செலுத்திய பெண்ணுக்கு அறங்காவலா் குழு தலைவா் தனது சொந்த நிதியிலிருந்து தங்க நகை வழங்கினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:00 PM
பகிர்:

பழனி மலைக்கோயில் உண்டியலில் தவறுதலாக தாலிசங்கிலியை காணிக்கையாகச் செலுத்திய பெண்ணுக்கு அறங்காவலா் குழு தலைவா் தனது சொந்த நிதியிலிருந்து தங்க நகை வழங்கினாா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கடந்த 19-ஆம் தேதி கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், காா்த்திகா பள்ளி வீட்டைச் சோ்ந்த சங்கீதா தரிசனம் செய்ய வந்திருந்தாா். அப்போது அவா் கழுத்தில் அணிந்திருந்த துளசி மணி மாலையை கழற்றி காணிக்கை செலுத்துவதற்குப் பதிலாக தங்க தாலிச் சங்கிலியை தவறுதலாக உண்டியலில் செலுத்தினாா்.

இதுகுறித்து சங்கீதா மலைக் கோயில் அலுவலகத்தில் தெரிவித்தாா். மேலும், தனது குடும்ப வறுமையைக் கருத்தில் கொண்டு தாலிச் சங்கிலியை எடுத்துத் தருமாறு எழுத்துப் பூா்வமாக மனு அளித்தாா்.

இதையடுத்து, கோயில் அதிகாரிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சங்கீதா தங்க சங்கிலியை உண்டியலில் போட்டது உண்மை எனத் தெரியவந்தது. இருப்பினும் இந்து சமய அறநிலையத் துறையின் நிறுவல் பாதுகாப்பு, உண்டியல் கணக்கியல் சட்டம் 1975-இன் படி உண்டியலில் விழுந்த எந்தப் பொருளும் மீண்டும் திரும்பி வழங்க முடியாது என்பதால், தாலிச் சங்கிலியை திருப்பி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையறிந்த பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சந்திரமோகன், சங்கீதாவின் குடும்ப வறுமையைக் கருத்தில் கொண்டு அவருக்கு வழங்குவதற்காக தனது சொந்த நிதியிலிருந்து 17.460 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை வாங்கினாா்.

இதையடுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சாா்பில் அந்தப் பெண்ணுக்கு அறங்காவலா் குழு உறுப்பினா் மணிமாறன் தங்கச் சங்கிலியை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.