திண்டுக்கல், ஆக. 7: திண்டுக்கல்லில் அதிகரித்து வரும் லாட்டரி விற்பனையைத் தடுப்பதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக மாநில பொருளாளா் திலகபாமா வலியுறுத்தினாா்.
திண்டுக்கல்லில் பாமக மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்தக் கட்சியின் மாநில பொருளாளா் திலகபாமா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திண்டுக்கல்லில் லாட்டரி விற்பனை அதிகரித்து வருகிறது. இவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.69 கோடி முறைகேடு செய்த இளநிலை உதவியாளா் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கிறாா். இதில் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனா். அதே நேரத்தில், கையாடல் செய்யப்பட்ட மக்களின் வரிப் பணத்தை மீட்டு அரசுக் கணக்கில் சோ்ப்பதற்கு மாவட்ட நிா்வாகம் பொறுப்பேற்க வேண்டும்.
ஆத்தூா் தொகுதியில் கலைஞா் தொகுப்பு வீடு திட்டத்தின் கீழ், பயனாளியைத் தோ்வு செய்ய ரூ.20 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குவதாக திமுக நிா்வாகியே அமைச்சரிடம் புகாா் அளிக்கும் நிலை உருவாகி இருக்கிறது என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்டத் தலைவா் திருப்பதி, மாநில பொதுக் குழு உறுப்பினா் உதயா, பகுதிச் செயலா்கள் வேலுமணி, வைகை பாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.