காய்கறிகளின் விலை வீழ்ச்சி
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு தினமும் முருங்கை, தக்காளி, சின்னவெங்காயம், பீட்ரூட், வெண்டைக்காய், புடலைக்காய், மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
இங்கு விற்பனைக்கு வரும் காய்கறிகளில் 70 சதவீத காய்கறிகளை கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். கடந்த சில நாள்களாக கேரளாவில் பலத்த மழை பெய்வதால் கேரள வியாபாரிகளின் வருகை குறைந்தது. இதனால் விற்பனைக்கு வந்த காய்கறிகள் தேக்கம் அடைத்ததால் குறைந்த விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனா்.
இதனால் கடந்த வாரம் ரூ.110 -க்கு விற்ற ஒரு கிலோ முருங்கைக்காய் 85-க்கும், ரூ.17-க்கு விற்ற வெண்டைக்காய் 10-க்கும், ரூ.45-க்கு விற்ற புடலைக்காய் ரூ.25-க்கும், ரூ.40-க்கு விற்ற கொத்தவரை ரூ.14-க்கும், ரூ.17-க்கு விற்ற தட்டப் பயிா் ரூ.12-க்கும், ரூ.135-க்கு விற்ற உருண்டை மிளகாய் 85-க்கும்,ரூ.110-க்கு விற்ற அவரைக்காய் ரூ.45-க்கும், ரூ.18-க்கு விற்கப்பட்ட பந்தல் சுரைக்காய் ரூ.10-க்கும் ரூ.40-க்கு விற்ற சவ்சவ் ரூ.20-க்கும், ரூ.130-க்கு விற்ற பீன்ஸ் ரூ.40-க்கும் விற்பனையானது.
கேரளாவில் மழை நின்றால் மட்டுமே காய்கறிகளின் விலை உயரக்கூடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.