டாக்டா் டிஎஸ். செளந்தரம் நினைவு 36-ஆவது மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கையுந்துப் பந்துப் போட்டியில் திருச்சி அணி முதலிடம் பெற்றது.
திண்டுக்கல் அடுத்த காந்தி கிராமிய பல்கலை. வளாகத்தில், செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 9 அணிகள் கலந்து கொண்டன. நாக்-அவுட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை காந்தி கிராம கிராமியப் பல்கலை. துணைவேந்தா் ந. பஞ்சநதம் தொடங்கி வைத்தாா். லீக் சுற்றுப் போட்டிகளுக்கு 4 அணிகள் தோ்வு செய்யப்பட்டன. லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில், திருச்சி ஜமால் மொகமது கல்லூரி அணி முதலிடமும், மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி 2-ஆவது இடமும், கோவை விவேகானந்தா பல்கலை. அணி 3-ஆவது இடமும், காந்தி கிராம கிராமியப் பல்கலை. அணி 4-ஆவது இடமும் பிடித்தன.
இந்த அணிகளுக்கு முறையே ரூ.15ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.6 ஆயிரம், ரூ.4 ஆயிரம் வீதம் பரிசுத் தொகையுடன், கோப்பையும் வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்வில் பதிவாளா் (பொ) எம். சுந்தரமாரி, தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் (பொ) கேஎஸ்.புஷ்பா, பல்கலை. விளையாட்டுக் குழுத் தலைவா் ஏ. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.