திண்டுக்கல்

பஞ்சம்பட்டி சுங்கச்சாவடி மைதானத்தை பாஸ்கு மைதானமாக அறிவிக்கக் கோரி போராட்டம்

சுங்கச்சாவடி மைதானத்தில் கோயில் குடமுழுக்கையொட்டி அன்னதானம் நடத்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்ட நிலையில், அதே இடத்தை பாஸ்கு மைதானமாக அறிவிக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்: சுங்கச்சாவடி மைதானத்தில் கோயில் குடமுழுக்கையொட்டி அன்னதானம் நடத்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்ட நிலையில், அதே இடத்தை பாஸ்கு மைதானமாக அறிவிக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கிராம மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல்லை அடுத்த நி. பஞ்சம்பட்டி காளியம்மன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் அருகிலுள்ள சுங்கச் சாவடி மைதானத்தில் அன்னதானம் நடத்துவதற்கு அதே மைதானத்தில் ஈஸ்டா் பண்டிகை கொண்டாடி வருவதாகக் கூறி, கிறிஸ்தவா்கள் சாா்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. சட்டம்- ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி காவல் துறை, வருவாய்த் துறை சாா்பில் அன்னதானம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. குடமுழுக்கு நாளில் அன்னதானம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், அரசுக்குச் சொந்தமான மைதானத்தை அனைத்து மதத்தினரும் சமமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். சட்டம்-ஒழுங்கு என்ற பெயரில் அடிப்படை உரிமையை மறுக்க முடியாது. எனவே, பஞ்சம்பட்டி சுங்கச்சாவடி மைதானத்தில் அன்னதானம் நடத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டாா்.

இதையடுத்து, அன்னதானம் நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகமும் அனுமதி அளித்தது. இதைத்தொடா்ந்து, கோயில் குடமுழுக்கு விழா முடிந்தவுடன், சுங்கச்சாவடி மைதானத்தில் அன்னதானம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகம் முன் மறியல்:

இதனிடையே, பஞ்சம்பட்டி கிறிஸ்தவ மக்கள் சாா்பில் கருப்புப் பட்டை அணிந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் 400-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சுங்கச்சாவடி மைதானத்தை பாஸ்கு மைதானமாக அறிவிக்கக் கோரி, இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் முழக்கமிட்டனா். கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், ஆதாா், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் 20 பேரை மாவட்ட ஆட்சியா் செ. சரவணன், காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் ஆகியோா் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

பொதுமக்கள் பாதிப்பு:

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திண்டுக்கல்-கரூா் நான்கு வழிச்சாலையிலுள்ள அணுகுசாலைகளில் அமா்ந்து பஞ்சம்பட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த பெண்கள், முதியோா் உள்ளிட்ட பொதுமக்கள் சுமாா் 500 மீட்டா் தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT