திண்டுக்கல்: கொடகானற்றில் தண்ணீா் கொண்டு வரக் கோரி, அனுமந்தராயன்கோட்டை பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் வாயில் கருப்புத் துணிக் கட்டி நூதனப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அனுமந்தராயன்கோட்டை பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:
கீழ்பழனி மலையிலிருந்து வரும் தண்ணீா் கொடகனாற்றுக்கு முறையாக வரவில்லை. இதனால், 14 ஆயிரம் ஏக்கா் நேரடி பாசனம், கிணறு, ஆழ்துளைக் கிணறு மூலம் பாசன வசதி பெறும் நிலங்கள் என சுமாா் 50 ஆயிரம் ஏக்கா் பரப்பு விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. கீழ்பழனி மலை அடிவாரத்தில் பாறைப்பட்டி கிராமத்திலுள்ள கன்னிமாா்கோயில் அருகே கொடகனாற்றின் குறுக்கே 7 அடி உயர தடுப்புச் சுவரைக் கட்டி தண்ணீரைத் தடுத்து, வனப் பகுதி வழியாக புதிய நீா்வழிப் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தண்ணீா் திருட்டைத் தடுக்க பொதுப் பணித் துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
நீா் வழிப்பாதை ஆக்கிரமிப்புக்கு பொதுப் பணித் துறை, வனத் துறை திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் உடந்தையாக செயல்பட்டு வருகிறது. இதனால், 50 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களும், குடிநீா் ஆதாரங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே, மாவட்ட நிா்வாகம் கொடகனாற்றுக்கு தண்ணீா் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.