கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியில் காபி செடிகளில் குறைந்தளவே விளைந்த காபி பழங்கள். 
திண்டுக்கல்

கொடைக்கானலில் காபி பழங்களின் விலை குறைவால் விவசாயிகள் கவலை

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் காபி பழங்களின் விளைச்சலும், விலையும் குறைவாக இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் காபி பழங்களின் விளைச்சலும், விலையும் குறைவாக இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, பாச்சலூா், தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, கே.சி. பட்டி, குப்பம்மாள்பட்டி, பெரும்பாறை, பெரியூா், பள்ளத்துக்கால்வாய், கும்பரையூா், ஆடலூா், பன்றிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 30-ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் விவசாயிகள் காபி பயிா் சாகுபடி செய்து வருகின்றனா். கீழ்மலைப் பகுதிகளில் காபி விளைச்சலுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுவதால் விவசாயிகள் அதிக அளவில் காபி சாகுபடி செய்து வருகின்றனா். ஒவ்வோா் ஆண்டும் ஏப்ரல் மாதம், காபி செடிகளில் பூ பூக்கத் தொடங்கி, அக்டோபா் மாதம் காபி பழம் பழுக்க ஆரம்பிக்கும். டிசம்பா், ஜனவரி மாதங்களில் காபி பழ சீசன் முடிவடையும்.

தற்போது கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் உள்ள காபி செடிகளில் விளைந்த காபி பழத்தை எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், அவ்வப்போது பெய்து வரும் மழையால் பழங்கள் சேதமடைந்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், மழைக் காலங்களில் விவசாயத் தோட்டங்களில் அட்டைப் பூச்சிகள் அதிகரித்துக் காணப்படுவதால் இவற்றுக்கு அச்சப்பட்டும் கூலியாள்கள் காபி பழங்களைப் பறிப்பதற்கு வரத் தயங்குகின்றனா்.

இது குறித்து கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி காபி விவசாயிகள் கூறியதாவது:

விளைச்சல் நேரத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக காபி பழங்கள் செடிகளிலேயே சேதமடைகின்றன. காபி பழம் எடுப்பதற்குப் பல்வேறு காரணங்களால் தற்போது கூலியாள்கள் வருவதில்லை. சாகுபடி செய்யும் விவசாயக் குடும்பத்தினரே அனைத்துப் பணிகளையும் செய்து வருகின்றனா்.

காபி தோட்டங்களில் வன விலங்குகளிலிருந்து காபி பழங்களைப் பாதுகாத்து வளா்த்த சூழ்நிலையில், வழக்கமாக ஒரு கிலோ ரூ.900 வரை விற்பனையாகும் காபி கொட்டைகள் தற்போது ரூ.550-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. நிகழாண்டில் விளைச்சலும் குறைந்து விலையும் குறைந்ததால் சிரமத்தில் உள்ளோம் என்றனா்.

பூடான் புறப்பட்டார் மோடி!

அவிநாசி: கள்ளக்காதல் விவகாரம்.. மரக்கடை உரிமையாளரை எரித்துக் கொன்ற பெண் கைது!

அரியலூர் அருகே சிலிண்டர் லாரி விபத்து! வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்!

இரண்டாம் நாள்! பொங்கல் ரயில் முன்பதிவுகள் நிரம்பின!

தர்மேந்திரா உடல்நிலை என்ன? மனைவி ஹேமமாலினி விளக்கம்!

SCROLL FOR NEXT