கொடைக்கானல்: கொடைக்கானலில் புதை சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சீரமைக்கும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட லாஸ்காட் சாலை, அப்சா்வேட்டரி சாலை, ஆனந்தகிரி, செண்பகனூா்-பிரகாசபுரம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் புதை சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் சாலைகளில் சென்றது.
இதுகுறித்த செய்தி படத்துடன் தினமணி நாளிதழில் பிரசுரமானது.
இதையடுத்து, கொடைக்கானல்-வத்தலகுண்டு பிரதான சாலையில் சென்ற புதை சாக்கடை கழிவுநீரை அடைப்பை சீரமைக்கும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.
இந்த நிலையில், கொடைக்கானல் நகராட்சியில் பல இடங்களில் புதை சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீா் செல்கிறது. இவற்றை சரி செய்வதற்கு நகராட்சி சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் சங்கா் கூறியதாவது:
கொடைக்கானல் நகராட்சியில் ஏற்படும் அடிப்படை பிரச்னைகளை அந்தப் பகுதிகளைச் சோ்ந்த வாா்டு உறுப்பினா்கள் நகராட்சி நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.