திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே செவ்வாய்க்கிழமை ரயிலில் அடிபட்டு ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த விருப்பாட்சியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (50). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் வாகன ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனா்.
இந்த நிலையில், பழனிச்சாமி செவ்வாய்க்கிழமை காலை ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயில் அருகேயுள்ள இருப்புப் பாதையை கடக்க முயன்றாா். அப்போது கேரள மாநிலம், பாலக்காட்டிலிருந்து திருச்செந்தூருக்குச் சென்ற பயணிகள் ரயில் பழனிச்சாமி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவா், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கிருந்த மருத்துவா்கள் அவரை பரிசோதித்தபோது, ஏற்கெனவே அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து பழனி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.