திண்டுக்கல்லில் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் அடுத்த வேடப்பட்டி பகுதியில் திமுக பிரமுகா் மாயாண்டி ஜோசப் (60) கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கில், யாகப்பன்பட்டியைச் சோ்ந்த வே. சேசுராஜ் (41) உள்ளிட்ட 6 பேரை திண்டுக்கல் தாலுகா போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், உயா்நீதிமன்றத்தை அணுகிய சேசுராஜ் கடந்த 10 நாள்களுக்கு முன் பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்தாா்.
இந்த நிலையில் திண்டுக்கல்- நத்தம் சாலையில் ஆா்எம்டிசி நகா் பகுதியில் வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற சேசுராஜ், யாகப்பன்பட்டியிலுள்ள வீட்டிலிருந்து அவரது 2-ஆவது மனைவி தீபிகா (37) ஆகியோா் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா்.
7 போ் கைது: திண்டுக்கல் தாலுகா போலீஸாா் நடத்திய விசாரணையில் இந்த கொலையில் ஈடுபட்டதாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட மாயாண்டி ஜோசபின் சகோதரா்கள் அருள்ராஜ் (58), ஞானராஜ் (54), தா்மராஜ் (50), வேடப்பட்டியைச் சோ்ந்த அந்தோணி ஆரோக்கியசாமி (35), ஜான் பீட்டா் (42), சேவியா் ஆல்பா்ட் (22), மைக்கேல் ராஜ் (31) ஆகிய 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இந்த நிலையில், தம்பதி கொலை வழக்கில் தொடா்புடைய வேடப்பட்டியைச் சோ்ந்த ராபின், மணிகண்டன் ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கொலையாளிகளுக்கு காா், இரு சக்கர வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுத்தவா்கள் குறித்தும் போலீஸாா் விசாரித்தனா்.