மதுரை

பொதுவிநியோகத் திட்டத்துக்கு மசூர் பருப்பு: கொள்முதல் செய்வதற்கான தடை நீக்கம்:  உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN

பொதுவிநியோகத் திட்டத்திற்காக மசூர் பருப்பை கொள்முதல் செய்வதற்கான இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மசூர் வகை பருப்புகளை உட்கொள்ளும்போது நரம்பு மண்டலம் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக அரசு பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி,  மசூர் பருப்பு மற்றும் கேசரி பருப்பில் விஷத்தன்மை இருப்பதை உறுதி செய்தது. இதையடுத்து மதிய உணவுத் திட்டத்தில் மசூர் பருப்பை பயன்படுத்த அரசு 2007-இல் தடை விதித்தது.
இந்நிலையில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக இந்த மசூர் பருப்பு வகைகளைத் தேர்வு செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்தப் பருப்புகள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே பொதுவிநியோகத் திட்டத்திற்கு மசூர் பருப்பை கொள்முதல் செய்வதற்கான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசலைச் சேர்ந்த ஆதி ஜெகநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பொதுவிநியோகத் திட்டத்திற்கு மசூர் பருப்பை கொள்முதல் செய்வதற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மசூர் பருப்பு தடை செய்யப்பட்ட உணவுப்பொருள் அல்ல. இந்தியா முழுவதும் கிடைக்கக்கூடிய ஒரு உணவுப்பொருளே. மேலும், மசூர் பருப்பை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பின் ஒரு பிரிவிலேயே, மசூர் பருப்பில் செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தக்கூடாது,  அதில்  0.01 சதவீதம் கூட கேசரி பருப்பு இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  எனவே மனுதாரரின் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், மசூர் பருப்பில் கேசரி பருப்பு உள்ளிட்டஎந்த கலப்படமும் செய்யக்கூடாது. செயற்கை நிறமூட்டிகளை கலக்கக்கூடாது.
கலப்படம் இல்லை என தர பரிசோதனையில் உறுதி செய்த பின்னரே பொதுவிநியோகத் திட்டத்தில் விநியோகம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, மசூர் பருப்பு கொள்முதலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

SCROLL FOR NEXT