மதுரை

மதுரை அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று சிகிச்சை நோயாளிகளுக்கு தனி வார்டு

DIN

மதுரை அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு நவீன மருத்துவக் கருவிகளுடன் கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் தனியார் மருத்துவமனையில் மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில், அரசு மருத்துவமனைகளிலும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசு மருத்துவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பான பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை, மதுரை அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த இரு மாதங்களுக்குள் இரு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் கடந்த வாரம் மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவை அகற்றப்பட்டது. அதில் ஒரு சிறுநீரகம் அரசு மருத்துவமனையில் உள்ள இளைஞருக்கு பொருத்தப்பட்டது. அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளிகள் இதுவரை பொதுவார்டில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் உறுப்பு மாற்று சிகிச்சை நோயாளிகளுக்கான தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் கூறும்போது, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகளுக்கு தனிக்கவனம் தேவைப்படுகிறது. இவர்களுக்கு பிற நோயாளிகளிடம் இருந்து கிருமித்தொற்று ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. எனவே இவர்களை தனியாக வைத்து பராமரிக்க வேண்டியுள்ளது. இதற்காக நவீன உடல் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு தனி வார்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பிற நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கும் இங்கு அனுமதி கிடையாது. அறுவைச்சிகிச்சை மேற்கொண்ட நோயாளியின் உடல் புதிய உறுப்பை ஏற்று ஸ்திரத்தன்மையை அடையும்வரை தனி வார்டில் வைக்கப்பட்டிருப்பார்கள் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT