மகால் வடம்போக்கி தெருவில் நவீன மின்னணு கழிப்பறை அமைக்கமாநகராட்சி ஆணையர் உத்தரவு
மதுரை மகால் வடம்போக்கி தெருவில் நவீன மின்னணு கழிப்பறைகள் அமைக்க மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
மதுரை மகால் வடம்போக்கி தெருவில் நவீன மின்னணு கழிப்பறைகள் அமைக்க மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணி, ஐராவதநல்லூர் மயான சுற்றுச்சுவர் கட்டும் பணி, சி.எம்.ஆர்.சாலை முதல் ஐ.ஐ.சாலை வரையில் மாநகராட்சி இடம் ஆக்கிரமிக்கப்பட்டதை அகற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணி ஆகியவற்றை மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, தெப்பக்குளம் முதல் கேட்லாக் சாலை வரை நடைபெறும் மராமத்துப் பணியையும், காமராஜர்புரம் ஜோசப் பூங்காவில் நடைபெறும் சீரமைப்புப் பணியையும் நேரில் பார்வையிட்டார்.
மகால் வடம் போக்கித் தெருவில் நடைபெறும் பேவர் பிளாக் அமைக்கும் பணியை பார்வையிட்ட ஆணையரிடம், அப்பகுதி லாரி ஓட்டுநர்கள், இதர நபர்கள் திறந்த வெளியை மலம் கழிக்குமிடமாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் நவீன மின்னணு கழிப்பறைகள் அமைக்க சுகாதாரப் பிரிவு அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டார். மேலும், புது ராமநாதபுரம் சாலையை சீரமைக்க உத்தரவிட்ட ஆணையர், காந்தி நினைவு அருங்காட்சியகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சாலையை அகலப்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, உதவி ஆணையர் ரமேஷ் (மண்டலம் 3), செயற்பொறியாளர் சந்திரசேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.