எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தீர்ப்புகள் அமைய வேண்டும் என்பது சரியல்ல: பி.எஸ். ஞானதேசிகன்
நீதிமன்றத் தீர்ப்புகள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமையவேண்டும் என எதிர்பார்ப்பது ஜனநாயகத்துக்கு அழகல்ல என தமாகா மூத்த தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் கூறியுள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்புகள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமையவேண்டும் என எதிர்பார்ப்பது ஜனநாயகத்துக்கு அழகல்ல என தமாகா மூத்த தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் கூறியுள்ளார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கை விவரம்:
தமிழகத்தில் 11 சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பானது ஏற்கத்தக்கது அல்ல என கருதினால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். ஏற்கெனவே இந்தச் சட்ட விளக்கத்துக்கு நிலுவையில் உள்ள வழக்குடன் இந்த மனுவும் இணைத்து விசாரிக்கப்படும்.
பேரவைத் தலைவரின் தீர்ப்பு சரியா? தவறா? என பார்க்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு. ஆனால், பேரவைத் தலைவர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், அதில் நீதிமன்றம் தலையிடாது. எனவே தமிழகத்தில் 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வழக்கில் உள்ளர்த்தம் கற்பித்து அரசியல் பிரமுகர்கள் கருத்துக் கூறுவது சரியல்ல. நீதிமன்ற மாண்பைக் குலைக்கும் வகையில் அரசியல் தலையீடு என குறிப்பிட்டு கருத்துத் தெரிவிப்பதும் அழகல்ல. குட்கா வழக்கில் மத்திய புலனாய்வு விசாரணைக்கு வழக்கை மாற்றியது உயர்நீதிமன்ற
நீதிபதிதான். அந்தத் தீர்ப்பை வரவேற்பவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வழக்கில் தீர்ப்பை விமர்சிப்பது ஏன்?.
தாங்கள் நினைத்தபடி தீர்ப்பு அமையவில்லை என்ற ஆதங்கத்தில் விமர்சனம் செய்வது ஜனநாயகத்துக்கு அழகல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.