திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழாவுக்கு தயாராகும் தேர்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்துக்கு, கோயில் திருத்தேர் தயார்ப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது .
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்துக்கு, கோயில் திருத்தேர் தயார்ப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது .
திருப்பரங்குன்றம் கோயில் பங்குனிப் பெருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவினையொட்டி, சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் அன்னம், தங்க மயில், தங்கக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வருகிறார்.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான ஏப்ரல் 1 ஆம் தேதி பட்டாபிஷேகமும், ஏப்ரல் 2 திருக்கல்யாணமும் நடைபெற உள்ளன. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக ஏப்ரல் 3 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருள, தேர் கிரிவலப் பாதை வழியாக சுற்றி வரும். இவ்விழாவில் பங்கேற்குமாறு, கோயில் சார்பில் தற்போது வெற்றிலைப் பாக்கு வைத்து கிராமங்கள்தோறும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த 2 நாள்களாக கோயில் வாசலில் உள்ள பெரிய தேர் தயார்ப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில், கொடுங்கைகள் அமைத்து 5 அடுக்குகள் மற்றும் தலை அலங்காரத்தில் தேர் தயாராகி வருகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.