பாலியல் பேர வழக்கு: மதுரை பல்கலை. உதவி பேராசிரியர், முன்னாள் ஆராய்ச்சி மாணவருக்கு மே 28 வரை காவல் நீட்டிப்பு
அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியது தொடர்பான வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தை
அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியது தொடர்பான வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரையும், மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மும்தாஜ் திங்கள் கிழமை உத்தரவிட்டார்.
அருப்புக்கோட்டையில் அரசு உதவி பெறும் தனியார் கலை கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியது தொடர்பாக அக்கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவியை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டதை யடுத்து அவர்கள் ஐந்து நாள் நீதிமன்ற காவலில் எடுத்து நிர்மலாதேவியை விசாரணை செய்தனர். அவர், அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலை.யில் உதவி பேராசிரியர் முருகன் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக் கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அருப்புக்கோட்டை கல்லூரி நிர்வாகத்தினர், அங்கு பணி புரியும் உதவி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் புத்தாக்க பயிற்சியில் நிர்மலாதேவி கலந்து கொண்ட போது, அவரை சந்தித்ததாக பேராசிரியர் சிலரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை விருதுநகர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர். விசாரணையின் அடிப்படையில் இருவரையும் மே 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மும்தாஜ் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து முருகன், கருப்பசாமி ஆகியோரை பாதுகாப்புடன் போலீஸார், மதுரை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.