முகப்பு
மதுரை

பேராசிரியர் கொலை வழக்கு: நெல்லை நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்

பாளையங்கோட்டையில் பேராசிரியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜா, திருநெல்வேலி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 2 நாள்கள் போலீஸ் காவலில்

Updated On : 15 மே, 2018 at 3:47 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

பாளையங்கோட்டையில் பேராசிரியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜா, திருநெல்வேலி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 2 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
பாளையங்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (35). தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர். இவரது மாமனார் கொடியன்குளம் குமார். இவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி செந்தில்குமாரின் வீட்டுக்கு வந்த கும்பல் அங்கிருந்த கொடியன்குளம் குமாரை கொலை செய்ய முயன்றனர். அவர் தப்பியோடிய நிலையில் செந்தில்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த செந்தில்குமார் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இவ் வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாலமுருகன், ராக்கெட்ராஜா உள்ளிட்டோரை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் ராக்கெட்ராஜாவை போலீஸார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராக்கெட்ராஜா, பின்னர் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்கு தொடர்பாக திருநெல்வேலியில் உள்ள வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் ராக்கெட்ராஜாவை போலீஸார் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர்.
அப்போது 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கோரினர். மனுவை விசாரித்த நீதிபதி சந்திரா, ராக்கெட் ராஜாவை 2 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.
முன்னதாக திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.