முகப்பு
மதுரை

மதிமுக - நாம் தமிழர் கட்சியினர் மோதல் வழக்கு: முன்ஜாமீன் கோரி சீமான் மனு

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்களும், நாம் தமிழர் கட்சியினரும் மோதிக் கொண்ட வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை

Updated On : 22 மே, 2018 at 2:36 AM
பகிர்:

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்களும், நாம் தமிழர் கட்சியினரும் மோதிக் கொண்ட வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனு:
கதிராமங்கலம் போராட்டம் ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து அங்குள்ள மக்களைச் சந்திக்க முடிவு செய்திருந்தேன். இதற்காக மே 19 ஆம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தேன். அதே விமானத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோவும் வந்துள்ளார். இந்நிலையில் வெளியே என்னை வரவேற்க காத்திருந்த என் கட்சி தொண்டர்களுக்கும், வைகோவின் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்களின் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
எனக்கு முன்னதாக விமான நிலையத்துக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ தான் வந்துள்ளார். இதன் பின்னர் சிறிது நேரம் கழித்து வந்த என்னிடம், விமான நிலையத்துக்கு வெளியே நடைபெற்ற மோதல் குறித்து போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில் போராட்டத்துக்கு காரணம் எனக் கூறி திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு. எனவே, இந்த வழக்கில் இருந்து எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.