பிளாஸ்டிக் தடையால் 20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கும்: உத்தரவை ஒத்திவைக்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிப்பதால் 20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிப்பதால் 20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஜி.சங்கரன் கூறினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் அமைப்பான தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஜி.சங்கரன் தலைமை வகித்தார்.
மதுரை மாவட்டத் தலைவர் பி.ராமசாமி, தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம், மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கத் தலைவர் கே.பி.முருகன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கெளரவ செயலர் செல்வம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மதுரை மாவட்டத் தலைவர் கே.ராஜபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் நிறைவில், சங்கரன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக அரசு கொண்டு வந்துள்ள பிளாஸ்டிக் தடையால் இத் துறையை நம்பியுள்ள 6 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பர்.
ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர் இதில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்திருக்கின்றனர்.
பிளாஸ்டிக் தடையால் ஏற்படக்கூடிய இழப்பை ஈடு செய்ய 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நெருக்கடியையும் சந்திக்க வேண்டியுள்ளது. பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் மூலமாக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1500 கோடி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மின்வாரியத்துக்கு கட்டணமாக ரூ.500 கோடி கிடைக்கிறது.
பிளாஸ்டிக் தடையால், உற்பத்திக் கூடங்கள் மூடப்படுவதால் அரசுக்கு ரூ. 2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். தமிழகத்தில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளில் 80 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இருப்பினும் மறுசுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.
அதேநேரம், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை பயன்படுத்த எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. அரசின் இத்தகைய நடவடிக்கை, ஒட்டுமொத்தமாக பேக்கிங் துறையை, பன்னாட்டு நிறுவனங்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சியோ என எண்ணத் தோன்றுகிறது. தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை தான் அவசியமாக இருக்கிறது.
ஆந்திரம், கேரளம், தெலங்கானாவில் பிளாஸ்டிக் தடை கிடையாது. தமிழகத்தில் தடை செய்யப்படுவதால், வெளிமாநிலங்களில் உள்ள சந்தை வாய்ப்பையும் தமிழக உற்பத்தியாளர்கள் இழக்க நேரிடும். ஆகவே, தமிழகத்தில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் தடை அமல்படுத்துவதை ஒத்தி வைக்க வேண்டும் என்றார்.