மதுரையில் அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகள்: குடும்ப நல நீதிமன்றத்தில் 3,500 வழக்குகள் தேக்கம்
மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் மாதத்துக்கு 100 விவாகரத்து வழக்குகள் பதிவாகி வரும்
மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் மாதத்துக்கு 100 விவாகரத்து வழக்குகள் பதிவாகி வரும் நிலையில், கூடுதல் நீதிமன்றங்களின்றி வழக்குகள் தேக்கமடைந்து வருகின்றன.
உலக நாடுகளில் இந்தியாவில் மட்டுமே குறிப்பாக, தமிழகத்தில்தான் தம்பதியர் விவாகரத்து பெறுவது குறைவாக உள்ளது எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு, திருமணம் என்பது மதம், கலாசாரம் உள்ளிட்டவைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதும், தமிழத்தில் உள்ள குடும்பக் கட்டமைப்பும்தான் காரணமாக உள்ளன.
இந்நிலையில், வரதட்சணை, மகப்பேறின்மை, பெண்களின் பொருளாதார சுதந்திரம், விருப்பமில்லாத திருமணங்கள், திருமணத்துக்கு வெளியே உறவு வைத்துக் கொள்வது போன்றவைகள் விவாகரத்து கோருவதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில்தான் விவாகரத்து கோரும் தம்பதியர் எண்ணிக்கை அதிமாக இருந்துவந்த நிலையில், மதுரை போன்ற கலாசாரத்தைப் போற்றும் நகரங்களிலும் விவாகரத்து கோரி நீதிமன்றங்களில் காத்துக்கிடக்கும் தம்பதியரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு மாதத்துக்கு 20 முதல் 30 விவாகரத்து வழக்குகள்தான் பதிவாகும். ஆனால், கடந்த 4 ஆண்டுளாக மாதத்துக்கு சராசரியாக 100 வழக்குகள் பதிவாகின்றன.
அதேநேரம், 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்து திருமணச் சட்ட அசல் மனு, இந்திய விவாகரத்துச் சட்ட அசல் மனு, அசல் வழக்கு என பிரித்து மனுக்கள் பெறப்பட்டன. ஆனால், கடந்த ஓராண்டாக அனைத்தும் ஒரே மனுக்களாகப் பெறப்படுகின்றன.
மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை விவரங்கள்:
2010 - 761, 2011- 732, 2012 - 810, 2013 - 903, 2014 - 1042, 2015 - 1227, 2016 - 1204, 2017 - 1117, 2018 - 1323, 2019 ஜூன் வரை 711 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், நீதிமன்றத்தில் எழுத்தர்கள், தட்டச்சர்கள், பிரதி எடுக்கும் பணியாளர்கள், ஆவணங்களை பாதுகாப்பவர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் மிகவும் குறைவான பணியாளர்களே உள்ளனர். விவாகரத்து வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அறையிலும் போதிய இடவசதி இல்லை. சென்னையில் 8 குடும்ப நல நீதிமன்றங்களும், கோயம்புத்தூரில் 3 குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளன.
ஆனால், மதுரையில் ஒரு குடும்ப நல நீதிமன்றம் மட்டுமே உள்ளது. எனவே, போதிய இடவசதியுடன் கூடுதலாக 2 குடும்ப நல நீதிமன்றங்களை அமைத்தால் மட்டுமே வழக்குகள் தேங்காது. கடந்த ஜூன் மாதம் வரை மட்டுமே மொத்தம் 3,500 விவாகரத்து வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேக்கமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வழக்குரைஞர் நா. சரவணக்குமார் கூறியது: விவாகரத்து கோரும் தம்பதியருக்குள் பெரும்பாலும் தான் என்ற அகங்காரமே சிறு காரணமாக உள்ளது. இதனால், விவாகரத்து வரை வந்து விடுகின்றனர். சமரச மையம் அதை கண்டுபிடித்து, அவர்களுக்கான தீர்வை தருகிறது.
நன்கு பயிற்சி பெற்ற அனுபவமிக்க மூத்த வழக்குரைஞர்கள்தான் இந்த சமரச மையத்தில் விவாகரத்துக் கோரும் தம்பதியருக்கு ஆலோசனை வழங்குகின்றனர். கடந்த ஆண்டு 1,269 தம்பதியரில் 192 பேர் விவாகரத்து வேண்டாம் என்று வழக்கை திரும்பப் பெற்றனர்.
நிகழாண்டில் ஜூன் வரை 336 தம்பதியரில் 96 பேர் விவாகரத்து வேண்டாம் என்று வழக்கை திரும்பப் பெற்றுள்ளனர். ஆனால், அதிகமான எண்ணிக்கையில் வழக்குகள் பதியப்படுவதால், சமரச மையத்திலும் நிறைவாக பணியைச் செய்யமுடியாத நிலை உள்ளது. எனவே, கூடுதலாக குடும்ப நல நீதிமன்றங்களை ஏற்படுத்துவதுதான் இதற்கு தீர்வாக அமையும், என்றார்.
இது குறித்து மனநல மருத்துவர் ப்ரீத்தா நிலா கூறியது: கூட்டுக் குடும்ப கட்டமைப்பை மறந்துவிட்டு, தனிக்குடித்தனம் செல்வதும் அந்தச் சூழலில் வாழ்வதுமே விவாகரத்து கோருவதற்கு காரணமாக உள்ளது. தம்பதியர் தங்களுக்குள் மனம்விட்டு பேசி கொள்வது இல்லை. கணவன், மனைவி, மகன், மகள் என்று ஆளுக்கொரு செல்லிடப்பேசிகளை உறங்கும் வரையில் கையில் வைத்துக்கொள்கிறார்கள்.
தவறான செயலிகளை பயன்படுத்துகிறார்கள். திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களும் கூட தம்பதியரிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது. இதனால், விவாகரத்து கோருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றார்.