பிளாஸ்டிக்கின் மாற்றாக மூங்கில் பொருள்கள் வரவேற்பைப் பெறுமா? எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள்
நலிவடைந்த மூங்கில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை
நலிவடைந்த மூங்கில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை தக்கவைத்துக் கொள்ள தமிழக அரசு கடன் உதவி மற்றும் மானியம் அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
பிளாஸ்டிக் தயாரிப்புகள் மக்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியதை அடுத்து, மூங்கில் மரத்தில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் தொழில் நலிவடைந்தது. தற்போது, பிளாஸ்டிக் பொருள்களுக்கு அரசு தடைவிதித்துள்ளதால், மூங்கிலில் தயாரிக்கப்படும் கூடை, தட்டு, விசிறி போன்ற பொருள்கள் மீது மக்களுக்கு மீண்டும் ஆர்வம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு, அவற்றைத் தயாரிக்கும் கைவினைத் தொழிலாளர்களுக்கு எழுந்துள்ளது.
மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மூங்கில் மரத்தில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் தொழிலை நம்பி 3 ஆயிரம் தொழிலாளர்கள் இருந்தனர். தற்போது, 200 பேர் மட்டுமே இத்தொழிலை தொடர்ந்து செய்து வருகின்றனர். அதேபோல், இப்பகுதியில் மூங்கில் கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் 20 மட்டுமே உள்ளன.
இது குறித்து மூங்கில் கைவினைப் பொருள்களை தயாரிக்கும் தொழிலாளி விஜயராகவன் கூறியதாவது: கேரளத்திலிருந்து கொண்டுவரப்படும் மூங்கில் மரங்களை வாங்கி பொருள்களை தயாரித்து வருகிறோம். காரைக்குடி, சிறுமலை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மூங்கில் மரங்கள் விற்பனைக்கு வருகின்றன. 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.100-க்கு விற்ற மூங்கில் கட்டு, தற்போது ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வீடுகளில் மூங்கில் பொருள்கள், மண்பாண்டப் பொருள்களின் பயன்பாடு, பிளாஸ்டிக் பொருள்கள் வந்த பிறகு வெகுவாகக் குறைந்துவிட்டன.
அதேபோல், உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கேரட், முள்ளங்கி, தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளை வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்புவதற்கு மூங்கில் மற்றும் பனை ஓலைப் பெட்டிகளை அனுப்பி வந்தோம். அவை பிளாஸ்டிக் பெட்டிகளாக மாறிவிட்டன. காய்கறிகளை அனுப்புவதற்கு மூங்கில் மற்றும் பனை ஓலைப் பெட்டிகளை மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
மேலும், பூ மற்றும் பழக் கூடைகள், பெட்டிகள் தயாரிப்புக்கான கூலிக்கேற்ப விற்பனை இல்லாததால், அவற்றை படிப்படியாக நிறுத்தி விட்டோம். பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு குறைந்துவரும் நிலையில், மக்கள் விரும்பினால் மீண்டும் அவற்றை தயாரிக்க முடியும் என்றார்.
மூங்கில் கைவினைப் பொருள் வியாபாரி ராஜ்குமார் கூறியதாவது: பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதை மக்கள் நன்கு அறிவர். எனவே, சுற்றுச்சூழலுக்கும், மனித உடலுக்கும் தீங்கு விளைவிக்காத மூங்கில் மரத்தாலான பொருள்களை அதிகளவில் மக்கள் பயன்படுத்த வேண்டும்.
போதிய வருமானம் இல்லாததால் தொழிலாளர்கள் வேறு தொழிலுக்குச் செல்கின்றனர். எனவே, நலிவடைந்து வரும் இத்தொழிலை காக்க, வங்கியில் கடன் கிடைக்கவும், மானியம் மற்றும் சலுகைகள் அளிக்கவும் அரசு முன்வரவேண்டும் என்றார்.