மதுரை

"இரட்டை இலைக்கு வாக்களித்த பெண்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டனர்'

DIN

தமிழகத்தில் கடந்த பல தேர்தல்களில் இரட்டை இலைக்கு வாக்களித்த பெண்கள் தற்போது உதயசூரியனுக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.  
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் பா.சரவணனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நடைபயணமாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இதில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் தொடங்கி, சன்னதிதெரு, பெரியரதவீதி, கோயில் வாசல், திருப்பரங்குன்றம் பேருந்துநிலையம்  உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள், முதியவர்கள், பக்தர்கள், பெண்கள் என அனைவரிடத்திலும் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
 தொடர்ந்து மலைக்கு பின்புறம் தென்பரங்குன்றம், தனக்கன்குளம், கூத்தியார்குண்டு உள்ளிட்ட பகுதிகளில்  திண்ணை பிரசாரம் செய்து அவர் பேசியதாவது:
 திருப்பரங்குன்றம் மக்களை சந்தித்து வாக்குசேகரித்த போது, பல தாய்மார்கள் நாங்கள் பரம்பரை பரம்பரையாக அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள். ஆனால் இந்த முறை உதயசூரியனுக்குத் தான் வாக்களிப்போம் எனக் கூறினார்கள். இது ஓட்டப்பிடாரத்தில் தொடங்கி தமிழகம் முழுக்க இதே நிலைதான். 
இவர்கள் மறைந்த முதல்வர் 
ஜெயலலிதாவை தெய்வமாக நினைத்தவர்கள்.
அவரது சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக நீங்கள் அளித்த வாக்குறுதிக்கு நாங்கள் திமுகவை ஆதரிக்கிறோம் எனக் கூறுகின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சாவில் மர்மம்  இருப்பதாக முதலில் கூறியவர் தற்போதைய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான். தனது பதவி பறிக்கப்பட்டவுடன் ஜெயலலிதா சாவுக்கு சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கேட்டார். அதன் பிறகு ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் இதுவரை நான்கு முறை சம்மன் அனுப்பியும், ஒரு முறை கூட ஆஜராகாமல் இருப்பவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதேபோல கொடநாட்டில் ஜெயலலிதாவின் பங்களாவில் இருந்த ஆவணங்கள், பணம் திருட திட்டமிடப்பட்டதில் 4 பேர் கொலை செய்யப்பட்டதாக வழக்கு உள்ளது. 
மேலும் பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் சட்டப் பேரவை துணைத் தலைவர்  மகன்கள் மற்றும் கூட்டளிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே தமிழகத்தை சீரமைக்க திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
 அவருடன் வேட்பாளர் பா.சரவணன், திமுக துணை பொதுச் செயலர் ஐ.பெரியசாமி, மாநகர் பொறுப்புக்குழு தலைவர் கோ.தளபதி, தெற்கு மாவட்டச் செயலர் மு.மணிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

"மே 23-க்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும்'
 விளாச்சேரி, திருநகர் அண்ணா பூங்கா,  ஹார்விபட்டி விலக்கு, அவனியாபுரம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: 
 விளாச்சேரி வரலாற்று சிறப்பு மிக்க ஊர். தமிழ்மொழியை செம்மொழியாக்க முதலில் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞர் பிறந்த ஊர். அவரது தமிழை போற்றும் விதமாக கருணாநிதி அவருக்கு நினைவில்லம் அமைத்து, வெண்கலச்சிலை நிறுவினார். ஆனால் அதன் பிறகு வந்த அதிமுக ஆட்சியாளர்கள் அந்த நினைவில்லத்தை பராமரிக்காமல் விட்டுவிட்டனர். மேலும் இங்குள்ள கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது.  வரும் 23 ஆம் தேதியோடு மோடி ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

திருவையாறு தமிழ்ப் பேரவை 60-ஆம் ஆண்டு விழா மாநாடு

SCROLL FOR NEXT