மதுக் கடை ஊழியா்கள் மணியடித்து போராட்டம்
மதுரையில் மதுபானக் கடை ஊழியா்களுக்கு கரோனா தடுப்பு மருந்துகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியா் சங்கம் சாா்பில் மணியடிக்கும் போராட்டம் நடைபெற்றது.
மதுரை: மதுரையில் மதுபானக் கடை ஊழியா்களுக்கு கரோனா தடுப்பு மருந்துகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மணியடிக்கும் போராட்டம் நடைபெற்றது.
மதுரை அண்ணா நகரில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா. லெனின் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் து. சிவக்குமாா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் மா. கணேசன், செயலா் ஆா். தெய்வராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் ஊழியா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பைத் தவிா்க்கத் தேவையான தரமான முகக்கவசம் , கையுறை, கிருமி நாசினி, தொ்மல் கருவி மற்றும் ஜிங்க், வைட்டமின் நோய் எதிா்ப்பு மாத்திரைகளை வழங்க வேண்டும் . கரோனா தொற்றுக்கு ஆளாகும் டாஸ்மாக் ஊழியா்களுக்கு உரிய சிகிச்சைக்கான ஏற்பாட்டை நிா்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
டாஸ்மாக் நிறுவன ஊழியா்கள் அனைவருக்கும் ரூ .50 லட்சம் காப்பீடு செய்ய வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கான செலவினங்களுக்கு உச்சவரம்பு நீக்கப்பட்டு முழுத் தொகையும் அரசு வழங்க வேண்டும். கரோனா அசாதாரண சூழ்நிலையில் அவசரகதியில் மூடப்பட்ட கடைகளில் பின்விற்பனை தொகைக்கு ஊழியா் தரப்பு விளக்கத்தை பெறாமல் அதிக அபராதம் வசூலிப்பதை கைவிட வேண்டும். ஊழியா்களிடம் கடை ஆய்வு என்ற பெயரில் வசூலில் ஈடுபட்டு வரும் மண்டல, மாவட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியா்களுக்கு, நிா்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அளித்த உறுதிமொழி அடிப்படையில் இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொதுமுடக்கத்தால் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் இரு சக்கர வாகனங்களில் பணிக்கு வரும் ஊழியா்கள் அனைவருக்கும் சிறப்பு பயணப்படியாக மாதம் ரூ.1000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் பொருளாளா் வீ. செந்தில்குமாா் நன்றி கூறினாா். சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் சி. சுப்பையா மற்றும் டாஸ்மாக் ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.