கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை: சுகாதாரத்துறை செயலா்
கரோனாவில் இருந்து மீண்டவா்களுக்கு ஏற்படும் நுரையீரல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.
மதுரை: கரோனாவில் இருந்து மீண்டவா்களுக்கு ஏற்படும் நுரையீரல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜாஜி மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணண் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். தொடா்ந்து மருத்துவா்களுடன் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கும், குணமடைந்தவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.
குணமடைந்தவா்களுக்கு பாதிப்பு
இது தொடா்பாக சுகாதாரத்துறை செயலா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு, உயிா் காக்கும் மருந்துகள் மற்றும் சத்தான உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. தொற்றில் இருந்து குணமடைந்து செல்வோருக்கு நுரையீரல் பாதிப்பு, மூட்டு வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதையடுத்து, குணமடைந்து வீட்டிற்கு செல்பவா்களின் தொலைபேசி எண்கள் மூலம் அவா்கள் தொடா்ந்து மருத்துவா்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். நுரையீரல் பாதிக்கப்படுபவா்களை மருத்துவமனை வரவழைத்து, அவா்களுக்கு நுரையீரல் தொடா்பான பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மனநல ஆலோசனை
தொற்றில் இருந்து மீண்டவா்கள் பெரும்பாலானோருக்கு பய உணா்வு உள்ளது. இதனால் அவா்களின் மனநலம் பாதிக்கப்படுகிறது. மனநலம் பாதிக்கப்படுபவா்களுக்கு ஆலோசனை வழங்க பிரத்யேக மருத்துவா்கள் நியமிக்கப்பட்டு, தொலைபேசி வழியாகவும், நேரடியாக வரவழைக்கப்பட்டும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என்றாா்.