மதுரை

சாலை விரிவாக்கத்தின்போது அகற்றும் ஒரு மரத்துக்கு 10 மரக்கன்றுகள்நடவில்லையெனில் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடைவிதிக்கப்படும்: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

DIN


மதுரை: சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்படும் ஒரு மரத்துக்கு இணையாக 10 மரக் கன்றுகள் நடும் முறையை பின்பற்றாவிட்டால், சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பாத்திமா தாக்கல் செய்த மனு: மத்திய, மாநில அரசுகள் புதிய சாலைகளை அமைக்கும்போது அல்லது சாலைகளை விரிவாக்கம் செய்யும்போது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதி உள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத் திருத்தத்தின்படி 100 கி.மீ.க்குள் நடைபெறும் சாலை விரிவாக்க பணிகளுக்குச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் ஒப்புதல் தேவையில்லை எனக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சாலை விரிவாக்கத்தின் போது பழமை வாய்ந்த மரங்கள் ஆயிரக்கணக்கில் வெட்டப்படுகின்றன. ஆனால் வெட்டப்படும் மரங்களுக்கு இணையாக மரக்கன்றுகள் நடப்படாததால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 20 ஆண்டுகளில் புதிய சாலைகள் அமைப்பதற்காக பல ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. சாலை விரிவாக்கத்தின்போது ஒரு மரம் வெட்டினால், அதற்கு இணையாக 10 மரக் கன்றுகள் நடவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுபோன்று மரக் கன்றுகள் நடப்படாததால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே வெட்டப்படும் ஒரு மரத்துக்கு, 10 மரக்கன்றுகள் நடும் முறையை அரசு பின்பற்றாவிட்டால், தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு தடைவிதிக்க நேரிடும் என எச்சரித்தனா்.

மனு தொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பா் 18 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT