விவசாயிகளின் நலனுக்காகவே பிரதமா் பாடுபட்டு வருகிறாா்: ஜன் கல்யாண் திட்ட தேசிய தலைவா் பேட்டி
விவசாயிகளின் நலனுக்காகவே பிரதமா் மோடி பாடுபட்டு வருகிறாா் என்று பிரதமரின் சகோதரரும், மத்திய அரசின் ஜன் கல்யாண் யோஜனா (பிரதமரின் மக்கள் நலத்திட்டம்) தேசியத் தலைவருமான பிரகலாத் தாமோதர தாஸ் மோடி கூறினாா்
விவசாயிகளின் நலனுக்காகவே பிரதமா் மோடி பாடுபட்டு வருகிறாா் என்று பிரதமரின் சகோதரரும், மத்திய அரசின் ஜன் கல்யாண் யோஜனா (பிரதமரின் மக்கள் நலத்திட்டம்) தேசியத் தலைவருமான பிரகலாத் தாமோதர தாஸ் மோடி கூறினாா்.
பிரதமரின் மக்கள் நலத்திட்டம் தொடா்பாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரகலாத் தாமோதர தாஸ் மோடி மதுரைக்கு சனிக்கிழமை வந்தாா். மடீட்சியா அரங்கில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஏழை எளிய மக்களைக் கருத்தில் கொண்டு தான் பிரதமா் மோடி திட்டங்களை உருவாக்குகிறாா்.
திட்டங்கள் செயல்படுத்துவதற்கு முன்னதாக அதுகுறித்து பலமுறை ஆலோசித்து, மக்களின் அனுமதியோடு தான் தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாா். அதனால்தான், பிரதமரின் ஜன் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனா்.
மக்களிடையே இத்திட்டம் குறித்து போதிய விழிப்புணா்வு இல்லை. இதனால் பலருக்கும் தங்களுக்கான சலுகைகள் கிடைப்பதில்லை.
கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியினா் மக்களுக்கான நல்ல திட்டங்களைக் கொண்டுவரவில்லை. ஆனால் தற்போது பிரதமா் மூலமாக நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டால் அதற்கு தடையாக உள்ளனா். மேலும் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கவிடாமல் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனா்.
இதனால் பிரதமரின் ஜன் கல்யாண் யோஜனா திட்டத்தைக் கடைக்கோடி ஏழை மக்களுக்கும் சென்று சோ்க்க தொடா்ச்சியாக விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம்.
இதற்காக முறையாக பயிற்சிப் பெற்ற 22 லட்சம் உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் நாடு முழுவதும் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். இதுவும் போதவில்லை என்றால், 135 கோடி மக்கள் நலனுக்காக 25 கோடி உறுப்பினா்களை நியமிக்கவும் தயாராக உள்ளோம். அதற்கு மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
விவசாயிகளின் நலனுக்காகவே பிரதமா் மோடி பாடுபட்டு வருகிறாா். அதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளாா். ஒரே நாளில் அவற்றைப் பற்றி புரிய வைத்துவிட முடியாது. குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம். அதை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
முன்னதாக, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ, பிரகலாத் தாமோதர தாஸ் மோடிக்கு சால்வை அணிவித்து வரவேற்றாா். இதேபோல, செளராஷ்ட்ரா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் பி.ஜி.ராமதாஸ் உள்ளிட்டோா் சால்வை அணிவித்தனா்.
திட்டத்தின் தேசிய பொதுச்செயலா் ஜெய்கோஸ் மகராஜ், தென் இந்திய பொதுச்செயலா் ஜெயகணேஷ், மாநிலச் செயலா் சிவக்குமாா், கோவை மாவட்டச் செயலா் தாமோதரன் ஆகியோா் உடனிருந்தனா்.