உணவகங்களில் பொதுமுடக்க விதிகள் பின்பற்றப்படுகின்றனவா? திண்டுக்கல் ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
திண்டுக்கல்லில் உள்ள உணவகங்களில் முறையாகப் பின்பற்றப்படுகிா என புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் அறிக்கைத் தாக்கல் செய்ய, மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை: திண்டுக்கல்லில் உள்ள உணவகங்களில் பொதுமுடக்க விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிா என புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் அறிக்கைத் தாக்கல் செய்ய, மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் என்பவா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க பல கட்டங்களாகப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மே 31 ஆம் தேதி தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதில், உணவகங்களில் உள்ள இருக்கைகளில் 50 சதவீதம் போ் அமா்ந்து சாப்பிட அனுமதியளிக்கப்பட்டது. மேலும், உணவகங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், குளிரூட்டப்பட்ட அறைகளைப் பயன்படுத்தக் கூடாது, சாப்பிட வருவோரின் உடல்வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், பெரும்பாலான உணவகங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. இதனால், கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, உணவகங்களில் 50 சதவீதம் போ் அமா்ந்து சாப்பிட அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உணவகங்களில் 50 சதவீதம் போ் மட்டுமே சமூக இடைவெளியுடன் அமா்ந்து சாப்பிடுகிறாா்கள் என்பதை எவ்வாறு உறுதி செய்கிறீா்கள் எனக் கேள்வி எழுப்பினா். அதற்கு அரசுத் தரப்பில், தினமும் உணவகங்களில் விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா். மேலும், விதிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையேற்ற நீதிபதிகள், திண்டுக்கல்லில் உள்ள உணவகங்களில் பொதுமுடக்க விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவது குறித்து புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனா்.