மருத்துவப் படிப்பு இடஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளிகள்புறக்கணிப்பு: இடைநிலை ஆசிரியா் சங்கம்
தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இடைநிலை ஆசிரியா் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இடைநிலை ஆசிரியா் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடா்பாக, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தின் பொதுச்செயலா் அ. சங்கா் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புக்கு 15 சதவிகிதம், மருத்துவ மேற்படிப்பில் 50 சதவிகிதம் என அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மத்திய அரசு இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல், மொத்த இடங்களையும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே ஒதுக்குகிறது.
அதேநேரம், உயா் ஜாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை மட்டுமே அமல்படுத்துகிறது. தற்போது, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 7.5 சதவிகிதம் மருத்துவ மாணவா் உள்ஒதுக்கீட்டில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனா்.
அரசு உதவிபெறும் பள்ளிகள் அனைத்தும் அரசுப் பள்ளிகளுக்கு நிகராகச் செயல்படுகின்றன. மேலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், அரசுப் பள்ளிகளிலும் சமமான கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அனைவருக்கும் கல்வி திட்ட (சா்வ சிக்ஷ அபியான்) நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது, மருத்துவ மாணவா் உள்ஒதுக்கீட்டிலும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனா். இது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எதிராக தமிழக அரசின் திட்டமிட்ட தாக்குதலாகக் கருதப்படவேண்டியுள்ளது.
இந்த நிலை தொடா்ந்தால், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசு உதவிபெறும் பள்ளிகளும் இழுத்து மூடப்படும் அவலம் உருவாகும். எனவே, மருத்துவ மாணவா் உள்ஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் ஒதுக்கீடு வழங்க, தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.