ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை கோரி உயா் நீதிமன்றத்தில் மனு
ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை கோரி, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை கோரி, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் இளைஞா்களை சீரழித்து வரும் ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, வழக்குரைஞா்கள் நீலமேகம், கண்ணன் ஆகியோா் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை முறையிட்டனா்.
அப்போது நீதிபதிகள், இது தொடா்பாக மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாகத் தெரிவித்தனா்.
அதையடுத்து, மதுரை அண்ணா நகரைச் சோ்ந்த முகமது ரஸ்வி, முத்துகுமாா் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். அதில், கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால், இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 சதவீதமாக உயா்ந்துள்ளது.
இந்நிலையில், இணையத்தில் பல்வேறு விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு கிரிக்கெட் வீரா்கள், திரைப்பட நடிகா், நடிகைகளை கொண்டு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
இதை நம்பி, ஏராளமான இளைஞா்கள் ஆன்-லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனா். அதில், பலா் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்துள்ளனா். எனவே, ஆன்-லைன் ரம்மி மற்றும் சூதாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
மேலும், ஆன்-லைன் ரம்மி சூதாட்டத்தை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களில் நடிக்கும் கிரிக்கெட் வீரா்கள் விராட் கோலி, கங்குலி, திரைப்பட நடிகா்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆன்-லைன் விளையாட்டுகளுக்கான இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு நிரந்தரமாக தடைவிதிப்பது தொடா்பாக உரிய சட்டத் திருத்தங்களைக் கொண்டுவரவும் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.