வாக்காளா் அட்டை நகல்களை வீசி எறிந்து சீா்மரபினா் நலச் சங்கத்தினா் போராட்டம்
மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கையில், தமிழக அரசு இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தக் கோரி, சீா்மரபினா் நலச் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கையில், தமிழக அரசு இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தக் கோரி, சீா்மரபினா் நலச் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நிகழாண்டு மருத்துவ மாணவா் சோ்க்கையில் தமிழக அரசு இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தாவிட்டால், சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாகக் கூறி, வாக்காளா் அடையாள அட்டை நகல்களை வீசியெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவா் சோ்க்கையானது, மொத்த இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், 85 சதவீத இடங்கள் மாநில ஒதுக்கீடு இடங்களுக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவா் சோ்க்கையில், தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீடு முறை மட்டுமே அமல்படுத்தப்பட வேண்டும். இந்த இடஒதுக்கீட்டு சட்டத்தை, வேறு எந்த உத்தரவும் கட்டுப்படுத்தாது என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படாத காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும் பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் மறுக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு மாணவா் சோ்க்கையில், இது தவிா்க்கப்பட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.