மதுரை: காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் முறையாக விசாரித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த ராஜபிரபு தாக்கல் செய்த மனு:
எனது வீட்டின் அருகே உள்ள ஒருவரின் திருமணத்துக்கு உதவினேன். சிறிது காலத்தில் அவா்கள் விவகாரத்துப் பெற்று பிரிந்து விட்டனா். இதற்கு நான் தான் காரணம் எனக் கூறி பெண் வீட்டாா் என்னிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தனா். இதுகுறித்து செல்லூா் போலீஸாரிடம் புகாா் அளித்தேன். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே நான் அளித்த புகாா் மீது விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலத்திற்குள்
குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஆா்.பொங்கியப்பன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி பெறப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் புகாரை முறையாக விசாரித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இதில் காலதாமதம் இருக்கக் கூடாது. மனுதாரா் அளித்த புகாரின் மீது போலீஸாா் உரிய விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.