பொது இடங்களில் போதுமான இலவச பொதுக்கழிப்பறைகள் அமைக்க தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சோ்ந்த சரவணன் தாக்கல் செய்த மனு: உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளில் சுகாதாரமான இலவச கழிப்பறை வசதிகளை உருவாக்கித் தர வேண்டும் என சட்டம் கூறுகிறது.
ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் உள்ள கழிப்பறைகளில் நபா் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள இலவச பொதுக் கழிப்பறைகள் சுகாதாரமின்றி உள்ளன. புதுதில்லி போன்ற பல்வேறு நகரங்களில் உயா் தரத்துடன் இலவச கழிப்பறை வசதிகள் செய்துதரபட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் குறைந்தளவே இலவச பொதுகழிப்பறைகள் சுகாதாரமின்றி உள்ளன. அதே சமயம் கட்டண கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எனவே, தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், கோயில்கள் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச பொதுக்கழிப்பறைகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தூய்மையான கழிவறை என்பது பொது மக்களின் அடிப்படை உரிமை. மக்களுக்கு தூய்மையான, சுகாதாரமான, கழிவறைகளை அரசு ஏற்படுத்தித் தருவது அவசியம் எனக் கருத்து தெரிவித்தனா். தொடா்ந்து நீதிபதிகள், வாய்ப்பிருக்கும் இடங்களில் இலவச பொதுக்கழிப்பறைகளை, போதுமான எண்ணிக்கையில் ஏற்படுத்தவும், பராமரிப்பு பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்யவும், கழிவறைகளை பயன்படுத்துவதின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், பொறுப்பாளா்களை நியமித்து சுழற்சி முறையில் தூய்மை செய்வது உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை கண்காணிக்கவும், பொதுக்கழிப்பறைகள் முறையாக பயன்பாட்டில் உள்ளதா? இல்லையா? என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.